கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கரை ஒதுங்கிய கடலில் இருக்கும் மிதவை தட்பவெட்ப நிலை தகவல் பரிமாறும் இயந்திரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரையில் நேற்று (10/02/2020) ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள் இது குறித்து கடலூர் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் தந்துள்ளனர்.
![cuddalore district floating communication machine police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/lIgDSKxR-rAlD6JDR_mV_IS5ssaJwYfBsyKm7XczI78/1581444688/sites/default/files/inline-images/POLICE3_1.jpg)
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கடலூர் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த பொருள் கடலில் இருக்கம் மிதவை தகவல் பரிமாறும் இயந்திரம் என்று கூறப்படுகிறது. அந்த பொருளை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் பரங்கிப்பேட்டை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த மிதவை தகவல் பரிமாறும் இயந்திரம் கடலின் நீரோட்டம், கடலின் தட்பவெட்ப நிலை உள்ளிட்டவைகளை செயற்கைகோளுக்கு அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.