அரசின் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது; கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் 2020-21 ஆம் ஆண்டுக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
மாணவ, மாணவிகள் புதியது, புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வரும் 31-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான இலவச கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் (பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் போன்ற படிப்புகள்) எந்தவித நிபந்தனையும் இன்றி வழங்கப்படுகிறது. மூன்றாண்டு பட்டயப் படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் பாலிடெக்னிக் மற்றும் தொழிற் படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் போன்ற படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் பெற விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.