கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கமூர்நிஷா. இவர் வருமான சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக திருமுட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது வருவாய் துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ 14,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கமூர்நிஷா கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
அவர்களின் ஆலோசனையின் படி இன்று மாலை திருமுட்டம் வருவாய் வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம் மற்றும் தற்காலிக ஊழியர் உத்திரவன்னியன் ஆகியோரிடம் பணம் கொடுத்துள்ளார் கமுர்நிஷா. அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் மூவரிடமும் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர்களை கைது செய்து கடலூருக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.