நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதியை (CSR) வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதியை (CSR) இந்த பகுதி மக்களுக்கு செலவிடாமல் வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் உருவாவதற்காக தங்கள் வாழ்வாதாரமான விளைநிலங்களையும், வீடுகளையும் இழந்த விவசாயக் குடும்பங்களுக்கு இதுவரை உத்தரவாதமளித்த வகையில் அந்நிறுவனம் உரிய வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை.
தற்போது இந்த ஆண்டிற்கான CSR நிதியினை எந்தெந்த பணிகளுக்கு ஒதுக்கியதென தெரியவில்லை. அதேசமயம் இந்திய ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்குவதாக அறிகிறோம்.
கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி தொகுதிகளில் உள்ள பல கிராமங்கள் என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை பலமுறை நிறுவன அதிபர் அவர்களிடம் கடிதம் மூலமாகவும், மனுவாகவும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.
என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி, புவனகிரி தொகுதிகளில் பல கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே இந்த கிராமங்களில் அடிப்படை வசதி உள்கட்டமைப்புகளான குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சாலை வசதி, பள்ளி கட்டிடம், மருத்துவமனை கட்டிடம், வடிகால் வசதி, பொது கழிப்பிடம் போன்றவைகளை உடனடியாக என்.எல்.சி. நிறுவனம் செய்து தர முன்வர வேண்டும். இத்தகைய தேவைகளை செய்து தர மறுக்கும் நிர்வாகம் CSR நிதியை, குறிப்பாக ரயில்வே துறைக்கு ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு CSR நிதியை பயன்படுத்த வேண்டும். மறுத்தால், மாவட்ட பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்திட நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.