Skip to main content

ஆராயி குடும்பத்தினர் மீதான கொடூர தாக்குதல்! குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை - அன்புமணி வலியுறுத்தல்

Published on 26/02/2018 | Edited on 26/02/2018
Aarayi


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புதூர் கிராமத்தில் ஆராயி என்ற பெண்ணின் குடும்பத்தினர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆராயியின் 8 வயது மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறான். 14 வயது மகள் மிகக் கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார். தாய் ஆராயியும் தாக்கப்பட்டுள்ளார். ஆராயி, அவரது மகள் ஆகிய இருவரும் நினைவற்ற நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆராயிக்கும் அவரது மகள் மற்றும் மகனுக்கும் இழைக்கப்பட்ட கொடுமை மன்னிக்க முடியாதது. ஆராயியின் மகளுக்கு நேர்ந்த கொடுமை டெல்லி நிர்பயா, விழுப்புரம் நவீனா, தூத்துக்குடி புனிதா, போரூர் ஹாசினி ஆகியோருக்கு மனித மிருகங்களால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு சிறிதளவும் குறைவானது அல்ல. இந்த செயலை செய்தவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளம்புதூர் தாக்குதல் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆராயியும், அவரது மகளும் இறந்து விட்டார்கள் என்பது உள்ளிட்ட வதந்திகள் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்திக் கொள்ளாத வகையில் விசாரணையில் தெரியவந்த உண்மைகளை, புலன்விசாரணை பாதிக்கப்படாத வகையில் வெளியிட வேண்டும். அதன்மூலம் வதந்திகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ஆராயி, அவரது மகள் ஆகியோரைக் காப்பாற்றத் தேவையான உச்சபட்ச மருத்துவத்தை மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும்; உடல்நலம் தேறிய பிறகு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்