தமிழகத்தில் தற்போது பெரிய மாவட்டமாக இருப்பது திருவண்ணாமலை மாவட்டமாகும். இந்த மாவட்டத்தை விட சிறிய மாவட்டங்கள் எல்லாம் பிரிக்கப்பட்டு வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆரணி நகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் செய்யார் நகரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை சமீபமாக எழுந்துள்ளது.
செய்யார் நகர வியாபாரிகள் சங்கத்தினர், முக்கிய அமைப்பினர் சேர்ந்து செய்யார் நகரில் ஊர்வலம் நடத்தி, செய்யாரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனுவை தந்துள்ளனர்.
இதேபோல், ஆரணி பொதுநல அமைப்புகள் இணைந்து, ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தினர். ஒரு லட்சம் மக்களிடம், இதற்காக கையெழுத்து வாங்கி அரசாங்கத்திடம் தரும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஒரு மாவட்டத்தில் உள்ள இரண்டு நகர மக்கள், எங்கள் நகரத்தை மையமாக வைத்து, அதனை தலைமையிடமாக அறிவித்து தான் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு போராட துவங்கிவிட்டார்கள். இந்த விவகாரத்தில் அரசாங்கம் எப்படி முடிவு எடுக்கப்போகிறது என்பது போகபோகத்தான் தெரியவரும்.