உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர். இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இருந்த போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து 10 ஆயிரத்தைக் கடந்தது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பதால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரலில் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.