'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். அதில், " மேக் இன் இந்தியா திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்று , "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் யுவனின் பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது யுவன் ஆக்கரமித்துள்ளதாக அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.