Skip to main content

'உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்யுங்கள்'-வழிமுறைகளுடன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 30/01/2025 | Edited on 30/01/2025
Court orders exhumation of Jagbar Ali's body

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலைச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இது குறித்து கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து அதே இடத்தில் எக்ஸ்ரே எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெகபர் அலியின் மனைவி மரியம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 'சுற்றுச்சூழல் ஆர்வலரான என்னுடைய கணவரை கடந்த 17 ஆம் தேதி கொடூரமாக கொலை செய்துள்ளனர். கடந்த 17ஆம் தேதி மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வரும் பொழுது டிப்பர் லாரி ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குவாரிகள் குறித்து புகார் தெரிவித்ததால் ஏற்கனவே மிரட்டல்கள் வந்திருந்தது. காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் புகார் பதிவு செய்ய தயக்கம் காட்டினார்கள். சாலை விபத்தில் கணவர் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த கணவரின் உடல் ஜனவரி 18ஆம் தேதி மாலை 4 மணியளவில் புதைக்கப்பட்டது. உடற்கூறாய்வு செய்யப்பட்டாலும் அறிக்கையை தரப்படவில்லை. உடற்கூறாய்வு சான்றிதழ் பத்து நாட்களுக்குப் பின்பு வழங்கப்பட்டது. உடற்கூறாய்வு உரிய முறைகளை பின்பற்றி நடத்தப்படவில்லை' என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உடற்கூறாய்வு செய்த மருத்துவர் ஆஜராகி லாரி ஏற்பட்டதில் எலும்பு முறிவுகள் உள் உறுப்புகளில் ஏற்பட்ட  காயம் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தார். எக்ஸ்ரே எடுக்க வேண்டியது அவசியம். கூடுதல் ஆவணமாக அமையும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி நிர்மல்குமார், 'புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட எக்ஸ்ரேவிற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். திருமயம் தாசில்தார் முன்னிலையில் காவல்துறையின் பாதுகாப்புடன் ஜெகபர் அலியின் உடலைச் சுற்றிலும் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க வேண்டும். ஊடகங்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படக்கூடாது. செல்போனில் புகைப்படங்களை எடுக்கக்கூடாது. உடல் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்பட வேண்டும். இது தொடர்பான புகைப்படங்கள் எங்கும் பகிரப்படக்கூடாது. எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்