தமிழகத்தில் கரோனா தடுப்பூசிப் போடும் பணியை மதுரையில் தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16- ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்கும், அதன்பிறகு 27 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அரசு கூறியிருந்தது.
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பூசியைப் போடுவதற்கானப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி 16- ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று கரோனா தடுப்பூசிப் போடும் பணியை தமிழக முதல்வர் துவங்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிப் போடும் பணியை அமைச்சர்கள் துவங்கி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.