
தமிழகத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,859ல் இருந்து 1,947 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 68 நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் 2-வது நாளாக இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 215 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,050 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் இணை நோய்கள் ஏதும் இல்லாத நிலையில் இன்று கரோனாவால் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் நான்காவது நாளாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒன்பது இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகள் செயல்பட சென்னை மாநகராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை வரை வணிக வளாகங்கள் அங்காடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாம்பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை அங்காடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகம் மற்றும் அங்காடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாம்பஜார், ஃபக்கி சாஹிப் தெரு, புலிபோன் பஜார், அபிபுல்லா சாலை, ராயபுரம் சந்தை, அமைந்தகரை சந்தை, கொத்தவால்சாவடி சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் செயல்பட 9ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.