உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் கொரோன வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியகுடியரசு மாளிகையில் திட்டமிடப்பட்டிருந்த ஹோலிப்பண்டிகை நிகழ்ச்சிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் மக்கள் அதிகமாக ஒன்று கூட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சரியான மருந்து இல்லாததால் வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வின் அடிப்படையில் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முக கவசம் (பேஸ் மாஸ்க்) மற்றும் கையுறை கட்டாயம் அணியவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இரண்டு ரூபாயில் இருந்து 5 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த முகக்கவசம் மற்றும் கையுறை தற்பொழுது 20 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. முகக்கவசத்தில் முதல் தரம் எனக்கூறப்படும் என்.95 எனப்படும் முகக் கவசத்தின் விலையும் பல மடங்கு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பல மருந்து கடைகளில் முகக்கவசம் மற்றும் கையுறைகள் ஸ்டாக் இல்லை என கூறப்படும் நிலையில், தற்பொழுது தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில வியாபரிகள் டிமாண்ட் செய்து மக்களின் அச்சத்தை பயன்படுத்திக்கொண்டு இதன் விலையை பன்மடங்காக உயர்த்தி விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. தற்பொழுது வைரஸின் தாக்கம் குறைவாக உள்ளபோதும் எம்.ஆர்.பி விலையை விட பலமடங்கு விலையேற்றம் செய்து விற்பனை செய்கின்றனர்.
அரசு உடனடியாக தலையிட்டு அதிகவிலைக்கு இந்த உயிர் காக்கும் பொருட்களை விற்கும் வியாபாரிகள் மீதும், இதை பதுக்கி வைக்கும் தொழிலதிபர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முகக்கவசம் மற்றும் கையுறை விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டோம். அவர் தொடர்பை எடுக்கவில்லை.