
எந்தவித பிரதிபலனும் பார்க்காது அனைத்து மக்களுக்கும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வரும் இயற்கை நீர் ஊற்றான காரைக்குடி சம்பை ஊற்று போல், நெருக்கடி காலங்களிலெல்லாம் மக்களின் துயர் தீர்த்து வருகின்றது மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்த காரைக்குடி ஊற்று எனப்படும் வாட்ஸ் அப் குழு! அதுவும், கரோனா தொற்றுக் காலத்தில் காரைக்குடி ஊற்று வாட்ஸ் அப் குழுவின் நிவாரணப் பணிகள் பிரம்மாண்டம் என்கின்றனர் பொதுமக்கள்.

உலகையே அச்சுறுத்திப் பலி கொள்ளும் கரோனா தொற்றுக் காலத்தில், கரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு எளிய மக்களின் அன்றாடத் தேவையையே முடக்கிப் போட்டது. இவ்வேளையில், எளியோரின் அன்றாடத் தேவைகளை எதிர்க்கொள்ளும் விதமாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பெரு நகராட்சியில் வசிக்கும் சாலையோர முதியோர்கள், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் வசிப்போர்கள், அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள், வட மாநில தொழிலாளர்கள், துப்பறவு தொழிலாளர்கள், துய்மைப் பணியாளர்கள், காவலர்கள், கோவிலில் படுத்துறங்கும் சாமியார்கள் மற்றும் இதுபோன்று எண்ணற்ற வீடு இல்லாதவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்குத் தேவையான மதிய, மற்றும் இரவு உணவுகளை வழங்க முன்வந்தது காரைக்குடி ஊற்று எனப்படும் தன்னார்வலர்கள் கொண்ட வாட்ஸ் அப் குழு.

மதிய உணவு மட்டும் 135 நபர்களுக்கு 135 பார்சல் என்றளவில் 01.04.20 முதல் தொடங்கிய இவர்களின் சேவை தற்பொழுது மதிய உணவு. 532, இரவு உணவு 110 எண்ணிக்கையளவில் பெருகி எளியோரின் இருப்பிடம் தேடி ஒவ்வொருவரிடமும் உணவு பார்சல் வழங்கப்பட்டு வருகின்றது. அது போல் 1000 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மாளிகை பொருட்களையும் வழங்க காரைக்குடி துணைச் சரகக் காவல்துறை இவர்களுக்கு தன்னார்வலர்கள் அடையாள அட்டை வழங்கியதோடு மட்டுமில்லாமல் பெரும் உந்து சக்தியாகவும் மாறியது. இதே வேளையில், இந்த காரைக்குடி ஊற்று வாட்ஸ் அப் குழு சேவையினைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சேவை மென்மேலும் தொடர ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், சேதுபாஸ்கரா விவசாயக் கல்லூரி மூலம் பெற்ற 1 1/4 டன் எடையிலான அரிசியையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சாதாரன வாட்ஸ் அப் குழு எளியோரின் தேவைகளை பூர்த்தி செய்து வருவது எப்படி.? "இந்த ஊரடங்கு காலத்தில் இச்சேவையை துவங்க உந்து சக்தியாக இருந்தது இரு பத்திரிகையாளர்களே! 2015ம் ஆண்டில் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது வெள்ள நிவாரணப் பணிகளில் முதலில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம். அப்பணி மனதிற்கு நிறைவினைக் கொடுக்க, 2016 ஆண்டு நடைப்பெற்ற சல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் 5000 பேருக்கு தினமும் உணவு வழங்கினோம். அதற்கடுத்து 2018 கேரள வெள்ள நிவாரணத்திலும், அதே ஆண்டில் கஜா புயலின் போது நிவாரணப் பணியாற்றினோம். அதன் பின் மத்திய அரசில் பணியாற்றிய அரசு சோமன், பொதுப்பணித்துறையில் பணியாற்றும் செந்தில்குமார், சேதுராஜன், இஸ்மாயில், நாராயணன், கோவிலூர் சரவணன், நசீர், மெய்யர், சபரி, கரோலின், மகாலெட்சுமி, மற்றும் வள்ளிச்சரண் உள்ளிட்ட 120 நபர்கள் ஒன்றிணைந்து 'காரைக்குடி ஊற்று' என பொதுவான பெயரிட்டு வாட்ஸ் அப் குழுவினை துவக்கினோம். குழுவாக துவங்கியவுடனே உடல் குளிர் சாதனப் பெட்டியை வாங்கி காரைக்குடி சுற்று வட்டார ஏழை எளிய மக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள வழி வகை செய்தோம். தற்பொழுது பல்வேறு இடங்களில் வசிக்கும் எளியோரைத் தேடி உணவுகளை வழங்க மட்டும் இதுவரை 60 களப்பணியாளர்கள் தன்னலம் பார்க்காதுப் பணியாற்றி வருகின்றார்கள். அதில் ஒரு மாற்றுத்திறனாளியும் அடக்கம். இதற்கான நிதிதேவையினை வழங்குவது காரைக்குடியில் வசிக்கும் அனைத்து மக்களே.!" என்கிறார் காரைக்குடி ஊற்று வாட்ஸ் அப் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ஜான்பால்.
இவர்களின் சேவைகளைப் பாராட்டி தங்களால் ஆன பெரும் உதவிகளை செய்து வருகின்றனர் சிவகங்கை மாவட்ட மக்கள். நாமும் பாராட்டலாமே..?