இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 900 கடந்துள்ளது. கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைச் சமாளிக்க 'PM CARES Fund'-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு அதானி குழுமம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடியை கவுதம் அதானி வழங்கியுள்ளார். மேலும் கரோனா தடுப்புப் பணிக்களுக்காக உதவிகளும் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.