கோவை சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில், கோவை மற்றும் நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட அக்கம் பக்க மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா அறிகுறி கொண்ட நோயாளிகளும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுமாக ஏறத்தாழ 120 பேர் அட்மிட் செய்யப்பட்டு, சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மூன்று வேளையும் சத்தான சைவ உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், போத்தனூரைச் சேர்ந்த 28 வயதான கரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தன் கணவரைப் பார்க்க வந்த மனைவி கூடவே தன் கணவருக்குப் பிடித்த சிக்கன் பிரியாணியையும் சமைத்துக்கொண்டு வந்தார். அதை அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதையறிந்த அந்தப் போத்தனூர் நோயாளி, தான் வீட்டு பிரியாணியைக் கேட்டு அடம்பிடித்தார். இதை மருத்துவமனையினர் ஏற்காததால் கோபமடைந்த அந்த நோயாளி, அங்கிருந்த தீயணைப்புச் சாதனத்தை எடுத்து, அதைக்கொண்டு மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து உடைத்து ரகளை செய்தார்.
தகவல் அறிந்து ஓடிவந்த சிங்காநல்லூர் போலீஸார், பிரியாணிக்காக ரகளை செய்த கரோனா நோயாளி மீது வழக்கைப் பதிவு செய்து, அவரைக் கடுமையாக எச்சரித்தனர்.