உலக நாடுகளில் கரோனா வைரஸ் மனிதர்களை தினசரி செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது. அந்த நோய் நமக்கு வந்து விடுமோ என்று ஒவ்வொருவரும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் வரும் 14-ந்தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா குறித்து பல்வேறு வடிவங்களில் பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சமூக பரவலை தடுக்கும் விதமாக காய்கறி மார்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சிதம்பரம் காவல்துறை சார்பாக டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் நாட்டுபுற வாத்தியங்களான நாதஸ்வரம், தவில், நாயணம், உறுமி உள்ளிட்ட வாத்திய கருவிகளை வாசித்து நாட்டுபுற பாடலுடன் கரோனா பற்றி பாட்டுபாடி காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அங்கு கூடியவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டு கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எந்தமாதிரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாட்டுபுற பாடல்கள் மூலமாக பாடப்பட்டது. இது அனைத்துதரப்பு மக்களையும் ஈர்த்தது.
இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் உள்ளிட்ட காவல்துறையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.