முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் விடுதலை செய்யப்பட்டுள்ள மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து அவர்களை விடுதலை செய்தது.
இந்நிலையில், முருகன் உட்பட 4 பேருக்கு பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் இது குறித்து கூறியதாவது, “முருகன் உட்பட நால்வரும் அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தால் கூட முறையான பாஸ்போர்ட் வாங்கி விட்டு தான் அவர்களை வெளியில் அனுப்ப முடியும். அதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் நிச்சயமாக எடுத்து அவர்களுக்கு உதவி புரிய முடியுமே தவிர, விடுதலை செய்துவிட்டார்கள் என்பதாலேயே உடனடியாக போகச் சொல்ல முடியாது. அதனால் தான் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் வந்ததும் நிச்சயமாக அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் நினைத்தால் அவர்கள் போகாமலேயே இருக்கலாம்” எனக் கூறினார்.