தமிழகத்தில் கரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே குறைந்து வந்த கரோனா தினசரி பாதிப்பு இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பள்ளிகளுக்கு நேரடி வகுப்புக்கள் தடை செய்யப்பட்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்படுகிறது. திரையரங்குகள், ஹோட்டல்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் முகக்கவசம் அணியாதவர்களிடம் கட்டாயம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் இதற்கு அச்சப்பட்டு ஒருசிலர் மாஸ்க் அணிவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கரோனா பாதிப்பு என்பது கடகடவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1158 தெருக்களில் கரோனா பாதிப்பு உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள். சென்னையில் நேற்று மட்டும் 876 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பிலும் தமிழகம் 6வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.