கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பாரதி நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் 26 வயது தீபிகா. இவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புள்ளியியல் துறையில் பணி செய்து வருகிறார்.

தற்போது கரோனா சிகிச்சை தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு அந்தப் பிரிவில் பலரும் பணியாற்றி வருகின்றனர். அதன் அடிப்படையில் அந்தப் பிரிவில் தீபிகாவை பணியாற்றுமாறு பணி மாறுதல் செய்துள்ளனர் அதிகாரிகள். ஆனால், தீபிகாவுக்கு அங்குப் பணி செய்ய விருப்பமில்லாமல் இருந்துள்ளார். அதிகாரிகள் மற்ற அனைத்து ஊழியர்களும் சேவை மனப்பான்மையுடன் அங்குப் பணி செய்யும் போது, தாங்கள் மறுக்கலாமா எனப் பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் தீபிகா அங்குப் பணி செய்ய விருப்பமில்லாமல் அதே நேரத்தில் அதிகாரிகளிடம் தனது விருப்பத்தையும் வலியுறுத்த பயந்துகொண்டு மருத்துவமனையில் வைத்திருந்த கை கழுவும் சானிடைசரை குடித்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் காவல்துறையில் பணி செய்து வரும் தீபிகாவின் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்குள் வந்து மருத்துவ அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தீபிகாவை கரோனா தனிப்பிரிவு பணியில் எப்படி ஈடுபடுத்தலாம் என்று அவர் பிரச்சினை செய்துள்ளார்.

இது சம்பந்தமாக மருத்துவ அதிகாரிகள் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். கரோனா நோய் பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்க முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் என அனைவரும் கடுமையாகப் பணி செய்து வரும் இந்த நேரத்தில் இந்தப் பணியில் ஈடுபட விருப்பம் இல்லாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தீபிகா பற்றிய செய்தி பரபரப்பாகியுள்ளது.