
கேஸ் சிலிண்டர் பழுது நீக்குவதாக கூறி தூத்துக்குடியில் வீட்டிற்கு வந்த நபர் பெண்ணிடம் நகையை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருயுகேள்ளது ஆறுமுகநேரி. இந்த பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய கணவர் ராஜ்குமார் வெளியூரில் பணியாற்றி வரும் நிலையில் சாந்தி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் சாலையில் நடந்து வந்த இளைஞர் ஒருவர், கேஸ் சிலிண்டர் பழுது பார்ப்பதாக கூறியுள்ளார். அதற்கு சாந்தி, தங்கள் வீட்டில் பழுது பார்க்கும் வேலை இல்லை என பதில் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நகன்ற அந்த நபர் மற்ற வீடுகளில் கேஸ் சிலிண்டர் பழுது பார்க்கும் வேலை இருக்கிறதா என கேட்டுள்ளார்.
அதன் பிறகு சாந்தி தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த இளைஞர் மீண்டும் வாசலில் நின்றுள்ளார். தொடர்ந்து வெளியே வந்த சாந்தி என்ன என கேட்டபோது நகைகளை கழட்டி தருமாறு கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார். சாந்தி கூச்சலிட்ட நிலையில் கையில் இருந்த கத்தியால் சாந்தியினுடைய கையில் கீறிவிட்டு அவர் கழுத்தில் இருந்த 16 சவரன் தாலிச் சங்கிலி மற்றும் ஐந்து சவரன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
தொடர்ந்து ரத்த காயங்களுடன் வெளியே வந்த சாந்தியை அக்கம்பக்கத்தினர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்ததில் மர்ம நபர் வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் நகைகளை கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல் வீட்டிற்கு முன் இருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.