கரோணா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியவர்களுடன், அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் உயிரைப் பணயம்வைத்து பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கொடுமை என்னவென்றால் இரண்டு மாதமாகச் சம்பளம் இல்லை! அது மட்டுமா? அறிவிக்கப்பட்ட கூலியும் குறைப்பு. இப்படிச் சட்டவிரோதமாகச் சம்பளப்பிடித்தம் செய்வதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு தீர்வுகாண கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சேனிடோரியத்தில் செயல்பட்டு வரும் அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்காலிகமாக கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு தூய்மைப் பணியாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் சென்ற ஏப்ரல் 17 முதல் மே 3 வரை 201 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் புதியதாகப் பணி அமர்த்தப்பட்டு தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு ஏற்கனவே 53 தொழிலாளர்கள் பல்லாண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர். மொத்தம் உள்ள 254 பேருக்கும், ஏப்ரல் 16 முதல் தினக்கூலியாக 490/- ரூபாய். இது ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியமாகும். இதுவே வழங்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
இதனை ஏற்று, ஊரே முடங்கிக் கிடந்த காலத்தில் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், இத்தொழிலாளர்களுக்கு ஒப்பந்ததாரரான கிரிஸ்டல் இண்டகரேட்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் சென்ற ஏப்ரல், மே மாத சம்பளத்தை 13-6-2020 வரை வழங்காமல் அவர்களைப் பரிதவிக்க வைத்து வந்தது.
இதனால் அவர்கள் போக்குவரத்துச் செலவுக்குக் கூட கைக்காசை செலவழித்து பணியாற்றி வந்தனர். அந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேறுவழியின்றி இரண்டு மாத ஊதியத்தை வழங்கினால் மட்டுமே தொடர்ந்து வேலை செய்வோம், இல்லை எனில் வேலை செய்யமாட்டோம் என்று தெரிவித்துவிட்டு கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கும் அவர்கள் முறையிட்டனர்.
அதனடிப்படையில் சென்ற 13-6-2020 அன்று பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜி.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளர். ராதாகிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் செந்தில்குமார், கிரிஸ்டல் நிறுவனம் சார்பில் சின்னசாமி, லோகநாதன், தொழிலாளர்கள் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி. மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையின் போது, மேற்படி கிரிஸ்டல் நிறுவனம் தினம் ஒன்றுக்கு 490 ரூபாய் ஊதியம் வழங்குவதாக அளித்த உறுதிமொழிக்கு மாறாக, ஒரு நாளைக்கு 423 ரூபாய் மட்டுமே வழங்குவோம் என்றும், அதில் வருங்கால வைப்பு நிதிக்கு 24% -ம், தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்திற்கு 3.75% , காப்பீட்டுத் திட்டத்திற்கு 1.25% -ம் ஆக மொத்தம் 29% சதவீத ஊதியத்தை அதாவது தினக்கூலி 423 ரூபாயில் 122 ரூபாயை பிடித்தம் செய்து கொண்டு மீதித்தொகை 301ரூபாய் மட்டுமே வழங்குவோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
தொழிலாளர்கள் சார்பில், ஏற்கனவே உறுதியளித்தபடி தினமொன்றுக்கு 490/-ரூபாய் வீதம் கணக்கிட்டு ஏப்ரல், மே மாதங்களுக்கான ஊதியத்தைப் பாக்கியின்றி உடனடியாக வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தொழிலாளர்களின் பங்குத் தொகை அதிக பட்சம் 12% மட்டுமே ஆகும். தொழிலாளர் செலுத்தும் அதே அளவு பங்குத் தொகையை நிர்வாகம் செலுத்த வேண்டும் என்பதே சட்டமாகும். ஆனால் கிரிஸ்டல் நிறுவனம் நிர்வாகம் செலுத்த வேண்டிய பங்குத் தொகையையும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்வதாகக் கூறுவதை ஏற்க இயலாது.
மேலும், தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தில் தொழிலாளர்களின் பங்குத் தொகை அவர்களது ஊதியத்தில் தற்போது 0.75% மட்டுமே ஆகும். ஆனால் கிரிஸ்டல் நிறுவனம் தொழிலாளர்களிடம் 3.75% பிடித்தம் செய்வதாகக் கூறுவதையும் ஏற்க இயலாது. அதோடு, காப்பீட்டுத் (Insurance) திட்டத்திற்காகத் தொழிலாளர்களின் ஊதியத்தில் 1.25% பிடித்தம் செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால், காப்பீட்டுத் திட்டம் பற்றிய எந்த விபரத்தையும் தற்போது வரை தொழிலாளர்களுக்கு கிரிஸ்டல் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
அதோடு, ESI திட்டம் பொருந்தும் தொழிலாளர்களுக்குத் தனியாக இன்ஷீரன்ஸ் திட்டம் அவசியமில்லை. ஆகவே, இன்ஷீரன்ஸ் திட்டத்திற்கு என சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டியதில்லை. கிரிஸ்டல் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோத, தொழிலாளர் விரோத, மோசடி நடவடிக்கைகளாகும். ஆகவே, அந்நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தரப்பில், மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் தொழிலாளர்களது கோரிக்கைகளைத் தெரிவித்துத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை தொழிலாளர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து பணிபுரியுமாறும் கேட்டுக் கொண்டனர்.
கரோனா என்கிற கொடூரத்தின் இந்த நெருக்கடியான நேரத்தில் பணி செய்வது அவசியமானது என்பதால் அதிகாரிகளின் வேண்டுகோளை தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர், கிரிஸ்டல் நிறுவனம் தெரிவித்தபடி ஏப்ரல், மே மாத ஊதியம் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்ததது. அதன் பிறகே தொழிலாளர்கள் கரோனா வார்டு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.