Skip to main content

'தொடரும் விபத்துகள்... மூன்றாவது முறையாக மக்கள் மறியல் போராட்டம்...'-கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் இருந்து காவலூர் சத்திரம் செல்லும் சாலை மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றாமல் அதன் மீது புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் இரண்டடி பள்ளம் ஏற்பட்டது. இந்த சாலை ஒருவழிச்சாலை என்பதால் இந்த சாலையில் தொடர்ந்து  விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு முன் தொடர் விபத்துக்கள் நடப்பதை தடுக்க சாலையை சரிசெய்ய வேண்டும் என கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

 

அப்போது உள்ளாட்சித் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையில் மறியல் செய்த மக்களிடம் சமரசம் பேசி, சாலையை சீர் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதன் அடிப்படையில் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர் சாலையின் பக்கவாட்டில் பள்ளமாக உள்ளதை சிமெண்ட் கொட்டி சரி செய்ய முயன்ற பொழுது வனத்துறையினர் சாலையை அனுமதிக்கப்பட்ட அளவை கடந்து அகலப்படுத்த கூடாது என தடுத்து விட்டனர்.

 

இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுத்து, சாலையை சீர் செய்யாததால் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகின. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். அடிக்கடி அவர்களும் கீழே விழுந்து அடிபட்டு வீட்டுக்கு வருகின்றனர்.

 

ஜூலை 10ஆம் தேதி மாலை காவலூர் சத்திரம் பகுதி சார்ந்த பெண்மணி ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது வாகனம் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண்மணி மற்றும் அவருடன் சென்ற குழந்தை இருவரும் கீழே விழுந்து அடிப்பட்டுள்ளது. அந்த பெண்மணிக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

இதனால் கொதிப்பான அக்கிராம மக்கள் ஆத்திரமடைந்து ஜூலை 11ஆம் தேதி காலை 8 மணிக்கு மறியல் போராட்டத்தை துவங்கினர். காலை சமையலை சாலையிலேயே சமைத்து உண்ணும் போராட்டம் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி மற்றும் வாணியம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் பாண்டியன், வாணியம்பாடி வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் வந்து, வனத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, விரைவில் நல்ல பதில் கிடைக்கும் எனச்சொல்லி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் தீர்வு காண்பதாகவும், போராட்டத்தை கைவிடுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

 

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது, போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

இந்த சாலையை சீர் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மூன்று முறை சாலை மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் 15 நாட்களில் சரி செய்துவிடுகிறோம் என வாக்குறுதி தருவதும், பொதுமக்கள் அதனை நம்பி போராட்டத்தை கைவிடுவதும் வாடிக்கையாகி உள்ளது . 'உயிர் சேதம் ஏற்பட்டால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ?' என்கிறார்கள் போரட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்