Skip to main content

"மாவீரனுடைய அந்த புன்சிரிப்பு... அந்தக் கண்கள் நம்முடன் பேசும்" - காடுவெட்டி குரு சிலை குறித்து நெகிழ்ந்த ராமதாஸ்

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
guru sivakumar

 

pmk guru



'மாவீரன் குரு நான் பெற்றெடுக்காத பிள்ளை' என்றார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். 'குரு இன்னும் நம்முடனேயே இருக்கிறார்' என்று சொன்னதோடு அல்லாமல், பாண்டிச்சேரியில் நடந்த குருவின் திருவுருப்பட திறப்பு விழாவில் திண்டிவனம் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் குருவுக்கு வெண்கல சிலை வைக்கவேண்டும், கல்லூரியில் குரு சட்டக் கல்லூரி வளாகம் அமைக்க வேண்டும். அதோடு காடுவெட்டியில் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அன்புமணி ராமதாஸ்.
 

16.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை திண்டிவனம் கோணேரிகுப்பத்தில் உள்ள சரஸ்வதி பொறியியல் கல்லூரில் ஐந்தரை அடி உயர குருவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது. மாவீரன் மறையவில்லை, நடந்து வருகிறார் என்று அக்கட்சியினர் பிரமிப்புடன் பார்த்தனர். விழாவில் சிலையை வடிவமைத்த சிற்பி சிவா என்கிற சிவக்குமார் சுப்பிரமணியை பாராட்டினார் ராமதாஸ்.
 

''என்னை சிற்பக்கலை மேற்படிப்பு நீங்கள்தானே படிக்க வைத்தீர்கள் என்பார் சிற்பி சிவா. இன்று அவருடைய திறமையை உலகம் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. பல விருதுகளை உலகளவிலே வாங்கியிருக்கிறார். இன்னும் அவர் பல விருதுகளை சிலை வடித்து வாங்க இருக்கிறார்.

இந்த சிலையை ஒரு மாதத்தில் செய்து முடித்திருக்கிறார். மிக அற்புதமான சிலை. மாவீரனுடைய அந்த புன்சிரிப்பு... அந்த சிலையை எப்போது வேண்டுமானாலும் பாருங்கள் அந்தக் கண்கள் நம்முடன் பேசும். நடக்கிற மாதிரியான சிலை. அதனை மிகவும் சிரமப்பட்டு இரவும் பகலுமாக உழைத்து சிற்பி சிவா செதுக்கியிருக்கிறார்.

அவரை நாம் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டும். (பலத்த கைத்தட்டல்) உலகத்தில் உள்ள பல நட்சத்திர விடுதிகளில் அவரது கைவண்ணம் மின்னிக்கொண்டிருக்கிறது. இன்னும் பல விருதுகளை அவர் வாங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" என உளமாற வாழ்த்தினார் ராமதாஸ்.


அந்த சிலையை பார்த்தால் மாவீரன் நம்முடன் இல்லை என்று என்னால் நம்ம முடியவில்லை. அவ்வளவு கம்பீரமாக நிற்கிறார் அண்ணன் குரு. அவ்வளவு அருமையாக சிலையை வடிவமைத்த சிற்பி சிவாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அன்புமணி. 

 

guru sivakumar


சிற்பி சிவா என்கிற சிவக்குமார் சுப்பிரமணி நக்கீரனிடம்,
 

"குருவின் சிலையை நான் வடிவமைப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அதே நேரத்தில் அய்யா என்னிடம் தவிர வேறு யாரிடமும் இந்த பொறுப்பை ஒப்படைக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடனும் இருந்தேன்.

அதேபோல் பாண்டிச்சேரியில் இரங்கல் கூட்டம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து எனக்கு அய்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அய்யாவை சந்தித்தபோது, இன்னும் குரு நம்மக்கிட்டயே இருக்கிறார். நம்முடனேயே பயணிக்கிறார் என்பது போல சிலை இருக்க வேண்டும்.

ஏதோ சிலை அமைத்தோம். திறந்தோம் என்று இருக்கக்கூடாது. அந்த சிலைக்கு உயிர் இருக்க வேண்டும் சிவா என்றார். அய்யாவின் பேச்சை கேட்டு இரண்டே நாளில் மூன்று விதமான புகைப்படங்களை கொடுத்தேன். 
 

மூன்று புகைப்படங்களையும் கையில் வைத்துக்கொண்டு அய்யாவும், சின்ன அய்யாவும் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தார்கள். அதில் தேர்வு செய்யப்பட்டதுதான் இந்த சிலை. அந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு காடுவெட்டியில் குருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய அய்யா, வன்னியர் அறக்கட்டளையில் குரு நடந்து வருவதுபோல் ஒரு சிலை வைப்பதற்கு நானும், சின்ன அய்யாவும், சிற்பி சிவா ஆகிய மூன்று பேரும் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தோம் என்றார்.
 

12 வருடங்களுக்கு மேல் எனக்கு அய்யாவுடன் தொடர்பு இருக்கிறது. இதுவரை என்னிடம் அவர் ஒரு சின்ன முகசுளிப்புக் கூட காட்டியதில்லை. என்னை சென்னை ஓவியக்கல்லூரியில் சிற்பக்கலை மேற்படிப்பு படிக்க வைத்தவர் அய்யாதான். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். 'சிவா நீ ஜெயிப்ப... சிவா நீ ஜெயிப்ப...' என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.
 

இதற்கெல்லாம் ஒரு பிரதிபலனாக, அய்யாவிடம் நான் நம்பிக்கையாய் இருப்பதை காட்டுவதற்காக எனது முழு உழைப்பையும் இந்த சிலை மீது காட்டினேன் என்றார் நெகிழ்ச்சியாக.

 

 

 

சார்ந்த செய்திகள்