
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இந்நிலையில் நிவாரணப் பணிகளுக்காக மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் இக்குழு வருகை தந்துள்ளது.
இரண்டு குழுக்களாகப் பிரிந்து வட மற்றும் தென் சென்னை பகுதிகளில் ஆய்வு செய்ய திட்டமிட்டனர். இக்குழுவினர் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய ஆய்வுக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து முதல் குழு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
கடும் பாதிப்புகளை சந்தித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இரண்டாம் நாளாக மத்தியக் குழு ஆய்வு செய்தது. இந்த நிலையில் புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து மத்தியக் குழு தமிழக முதல் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய குழு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் இடம்பெற்றுள்ளனர்.
அதேநேரம் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 நிவாரணம் அளிப்பதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.