"உங்களை நம்ப முடியாது, காவிரி உரிமை தண்ணீரையே உங்களால் வாங்கி கொடுக்க முடியல, தண்ணீர் இல்லாம பசுமையான பல இடங்கள் பாலைவனமாக மாறிடுச்சி. எங்க கிராமத்துல குடி தண்ணீராவது பஞ்சமில்லாம கிடைக்கிறது. அதுக்கும் மணல் குவாரி அமைத்து வேட்டு வைக்க விடமாட்டோம். எங்கள் கிராமத்தில் மணல் குவாரி தேவையில்லை அமைக்க விடமாட்டோம்." இப்படி ஒரு கிராமமே வைராக்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே உள்ளது விளாங்குடி . அந்த கிராமத்தில் மணல் குவாரி அமைப்பதற்காக பொக்கலைன் இயந்திரத்துடன் சிலர் வந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைப் படித்தனர்.
இரண்டு மணி நேரம் கழித்து "எங்க ஊர்ல மணல் குவாரி அமைக்க முடியாது, இதனால எத்தனை பேர் வேண்டுமானாலும் சிறைக்கு போக நாங்க தயார். இங்கிருந்து வண்டிய எடுக்கிட்டு போங்க " என அடிக்காத குறையாக விரட்டினர் அந்த கிராம பெண்கள்.
இதனை அடுத்து பொது மக்களை இன்று மாலை திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. அங்கு கூறிய பொதுமக்களோ, " மணல் அள்ளுவதால் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாழாகிடும், அதோடு, மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் ஊடயும் , அதனால எங்க கிராமம் மட்டுமல்ல மாவட்டமே பாதிச்சிடும். எங்களுக்கு மணல் குவாரி வேண்டவே வேண்டாம், என பிடிவாதமாக இருந்தனர்.
இறுதி வரை பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் கூட்டம் கலைந்தது.