விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனா? மாணிக்கம் தாகூரா? என்ற கேள்வி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் வரையிலும் பொதுவெளியில் நீடித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, மாணிக்கம் தாகூர்தான் வேட்பாளர் என, தொடர்ந்து பதிவிட்டு வந்தது நக்கீரன். காங்கிரஸ் கட்சியும் மாணிக்கம் தாகூரையே விருதுநகர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

விருதுநகர் தொகுதிதான் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த சீனியர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ‘ஓவர்டேக்’ செய்து, வேட்பாளர் தேர்வில் மாணிக்கம் தாகூர் ‘டிக்’ ஆனது எப்படி? இதற்கான விடை தெரிய வேண்டுமென்றால், கட்சியில் மாணிக்கம் தாகூரின் சீரான வளர்ச்சி குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
2009 நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக, இதே நாடாளுமன்ற தொகுதியில் புதுமுகமாக இவரைக் களத்தில் இறக்கியது காங்கிரஸ். வைகோ எங்கே? மாணிக்கம் தாகூர் எங்கே? என்கிற ரீதியில் கருத்துக்கள் அப்போது காரசாரமாக வெளிப்பட்டன. ஆனாலும், அந்தத் தேர்தலில் வெற்றிவாகை சூடினார் மாணிக்கம் தாகூர். பிறகுதான், காங்கிரஸ் தலைமையின் சரியான தேர்வு என்பது விருதுநகர் தொகுதியில் உள்ள கதர் சட்டைகளுக்கே புரிந்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் அண்ணன் மகனான மாணிக்கம் தாகூர், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அரசியலில் ஆர்வம் காட்டினார். இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் இணைந்து செயலாற்றினார். 1994-ல் அச்சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அடுத்து, தனது பணியை மாநில அளவில் விரிவுபடுத்தினார். அதனால், 1996-ல் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆக முடிந்தது. 2003-2005 காலகட்டத்தில், இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆனார். 2006-ல் காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவராகி, கட்சித் தேர்தல்களை சிறப்பாக நடத்தினார். 2008 வரையிலும், இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஆணையராக செயல்பட்டார். 2009-ல் விருதுநகர் தொகுதி எம்.பி. ஆனார். தற்போது, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் இருக்கிறார்.
மாணிக்கம் தாகூரின் உழைப்பும் சுறுசுறுப்பும் பிடித்துப்போனதால், ராகுல் காந்தியின் குட்புக்கில் இடம்பெற்றார். தமிழகம் கடந்து கட்சிப்பணி ஆற்றிவரும் மாணிக்கம் தாகூரை எளிதாக எடைபோட்டு விட்டார்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ். தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் மாணிக்கம் தாகூர். எம்.பி.யாக இல்லாத நிலையிலும் விருதுநகர் அரசியலில் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்தி வருகிறார். இந்தப் பின்னணிதான், அவரை விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆக்கியிருக்கிறது.
தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியையும், அமமுக வேட்பாளர் அய்யப்ப பரமசிவனையும் எளிதாக எதிர்கொண்டு, தேர்தல் களத்தில் ‘வெற்றிநடை’ போடுவார் மாணிக்கம் தாகூர் என்று அடித்துச் சொல்கிறார்கள் கதர் சட்டையினர்.