நாங்கள் சாதி பார்ப்பதில்லை.! காவல்துறையில் சாதி இல்லை என போலீசார் மார் தட்டிக்கொண்டாலும், " அவம் எம் சாதிப்பா.!" என ஊர் முழுக்க தம்பட்டம் அடித்து, சாதி ப்ளக்ஸ் அடித்து அதிகாரியை கொம்பு சீவியுள்ளனர் அவர் சார்ந்த சாதிக்காரர்கள்.
கோவை மாவட்டத்தில் தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்து பதவி உயர்வுப்பெற்று எஸ்ஐடி- சிபிசிஐடியாக சென்னையில் பணியாற்றி வரும் ம.மாடசாமி திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர்.
"பதவி உயர்வுப்பெற்று நம் நகருக்கு பெருமை சேர்த்த மகாலிங்கத் தேவரின் புதல்வர் மாடசாமி மென் மேலும் வளர வாழ்த்துகள்." என வாசுதேவநல்லூர் தொடங்கி நெற்கட்டும் சேவல் வரை ப்ளக்ஸ் போர்டு வைத்து எஸ்.பிக்கு விசுவாசம் காட்டியுள்ளனர் அந்த ஊர் மக்கள்.
அந்த ப்ளக்ஸ் போர்டு தான் இப்பொழுது பிரச்சனையாகியிருக்கின்றது.? இதில் என்ன பிரச்சனையென்றால் ப்ளக்ஸ் போர்டு வைத்தவர்கள் அனைவரும் அவர் சார்ந்த சாதிக்காரர்களே.!! " எம் சாதிக்குன்னு ஒரு பட்டம் இருக்குல்ல.! அதைப் போட்டு ப்ளக்ஸ் போட்டால் என்ன தவறு இருக்கு.? அவரு பதவியில் இருந்தால் அவருக்கு சாதி இல்லாமல் போகுமா.?" என தங்கள் தரப்பிற்கு நியாயம் கற்பிக்கின்றார்கள் எஸ்.பி.சார்ந்த சமூகத்தினர்.
இந்த ப்ளக்ஸ் பிரச்சனை மாவட்ட எஸ்.பி.க்கு செல்ல அவசரம் அவசரமாக ப்ளக்ஸை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் சொந்த சமூகத்தினரிடம் வாழ்த்துப்பெற்ற எஸ்ஐடி- சிபிசிஐடி எஸ்.பி. மாடசாமியோ ப்ளக்ஸ் விவகாரம் பற்றி வாய்திறக்கவில்லை இதுவரை..! இதனால் காவல்துறையினர் மத்தியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.