நாகையில் டி.டி.வி, தினகரன் கொடியேற்ற இருந்த ராட்சத கொடிமரத்தை, அகற்ற வேண்டுமென ஒ.எஸ்.மணியனின் ஆதரவாளர்கள் போட்டிக்கு அருகிலேயே கொடிகம்பம் கட்டமுயன்றதால் பெரும் பதட்டமாகியுள்ளது.
மூன்றாவது கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தினை நேற்று திங்கள் கிழமை வேளாங்கண்ணியில் துவங்கினார் டி.டி.வி தினகரன். இரண்டாவது நாள் பயணத்தை இன்று நாகை பேருந்துநிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் துவங்கினார். அவரது வருகையை முன்னிட்டு நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு லட்சம் மதிப்பீட்டில் பட்டன் மூலம் கொடியேற்றும் மிகப்பெரிய ராட்சத கொடிமரத்தை 52 அடியில் அக்கட்சியினர் கட்டினர்.
முறையான அனுமதியில்லாமல் கொடிமேடையை கட்டப்பட்டதாக கூறி கொடிக்கம்பத்தை நகராட்சி நிர்வாகம், போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தினர். கொடிகம்பம் அகற்றப்பட்ட நிலையில் காங்கிரட்டால் கட்டப்பட்ட பிரமாண்ட கொடி கட்டையை அகற்ற வேண்டும் என அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் ஆதரவு அதிமுகவினர் அந்த பகுதியில் திரண்டு போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் டி.டி.வி ஆதரவாளர்கள் அந்தகட்டையை அகற்றவிடமாட்டோம் என பிடிவாதமாக இருந்தனர். அதிமுகவினரோ விடாபிடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு ஜேசிபி இயந்திரத்தை கொண்டுவந்து அருகாமையிலேயே நாங்களும் கொடிமரம் கட்டப்போகிறோம் என பள்ளம் தோண்டி செங்கல், சிமென்டை கொண்டு போட்டிக்கு கொண்டுவந்து கொட்டி கொடி கட்டை கட்ட முயன்றனர். இருதரப்பு விவகாரத்தால் பரபரப்பு கூடியது.
பரபரப்புக்கு இடையில் நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியோடு ஜேசிபி மூலம் டி.டி.வி அணியினரால் கட்டப்பட்ட கொடிக்கட்டையை இடித்து தரைமட்டமாக்கினார். அதன் பின்னர் அதிமுகவினரும் தாங்கள் கொண்டுவந்த கொடிமரம் கட்டும் பணியை நிறுத்திக்கொண்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், தொடர்ந்து இரண்டு கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.