திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அந்தக் கொள்முதல் நிலையத்திற்கு அருகில் உள்ள குளத்தில் அரசுக்குச் சொந்தமான சாக்கு பண்டல்கள் கட்டுக்கட்டாக நனைந்து கிடப்பதைக் கண்ட விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இரண்டு நாட்களுக்குமுன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர். மேலும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, அசேஷம் பகுதியில் உள்ள திறந்தவெளி கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகளை, மீண்டும் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காகக் கொண்டுவந்து அடுக்கிவைக்கப்பட்ட 215 நெல் மூட்டைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள், மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருடன் இணைந்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் கண்ணாரப்பேட்டை கொள்முதல் நிலையப் பணியாளர்கள் ஆனந்தராஜ், கனகராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் குளத்தில் சாக்குப் பண்டல்கள் மிதப்பதை, அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ந்து போனார்கள். அரசுக்குச் சொந்தமான சாக்குப் பைகள் குளத்தில் மிதப்பதால், விவசாயிகளும் பொதுமக்களும் கோபத்தின் உச்சத்திற்கே சென்று, சாக்குத் தட்டுப்பாடு என்று கூறி நெல்லை, கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். ஆனால், அரசுக்குச் சொந்தமான சாக்குகளை, அதிகாரிகளின் உடந்தையோடு குளத்தில் மர்ம நபர்கள் வீசியுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டினர்.
தற்போது குறுவை அறுவடை பணிகள் திருவாரூர் மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கொள்முதல் நிலையத்துக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது. பல கொள்முதல் நிலையங்களில், சாக்குகள் பற்றாக்குறையாக உள்ளதாகக் கூறி நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் தொடரந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், முறைகேடு நடந்த கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அருகிலேயே சாக்குப் பண்டல்கள் குளத்தில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.