![Complaint against the female guard](http://image.nakkheeran.in/cdn/farfuture/l45gAVyU3-P9f6kGAmWAOMikICIY9imWDyAFeLx-i0w/1641451082/sites/default/files/inline-images/thottiyam-ins.jpg)
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் காவல் நிலையத்தில் பெண் காவலர் மீது அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல் நிலையம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமாவதி, தொட்டியம் கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரீத்தி. இவர்களுக்கும் தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவரும் , முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் கனகம்பரத்திற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கனகாம்பரம் போலீசாக இருப்பதால் தனது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஹேமாவதி, ப்ரீத்தி ஆகியோர் புகார் மனு அனுப்பியிருந்தனர். இதுதொடர்பான விசாரணை முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் நடந்துள்ளது. பின்னர் புகார் குறித்து விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் தொட்டியம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்ததாக கூறப்படுகிறது. இதில் ஹேமாவதி பிரீத்தி தரப்பினர் நேற்று காலை காவல் நிலையத்திற்கு சுமார் 11 மணி அளவில் வந்துள்ளனர்.
![Complaint against the female guard](http://image.nakkheeran.in/cdn/farfuture/cN3o9G3kGqzeEelzn36PQccQjUSfLVINfQWFCJrLEjQ/1641451102/sites/default/files/inline-images/thottiyam-inci.jpg)
ஆனால் மாலை வரை இதுதொடர்பாக எவ்வித விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் புகார் தரப்பினரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமாவதி, ப்ரீத்தி தரப்பினர் காவல் நிலையத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து மிரட்டியதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். அப்போது புகார்தாரர் ஹேமாவதி எங்களை ஏன் கேவலமாக நடத்துகிறீர்கள் என கேட்டு அங்கிருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காலையிலிருந்து சாப்பிடாமல் காவல்நிலையத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த ஹேமாவதி மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடன் வந்தவர்கள் ஹேமாவதியை தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஹேமாவதி, ப்ரீத்தி ஆகியோர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சியும், காவல் நிலைய வளாகத்தில் நியாயம் கேட்டு பேசும் வீடியோவும் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் தொட்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.