மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராகவும் அடுத்து வரப்போகிற தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராகவும் இந்தியா முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகள் மிகப்பெரிய போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இடதுசாரி இயக்கங்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம் என பல்வேறு வகையில் தங்களது எதிர்ப்புகளை மத்திய பாஜக அரசுக்கு தெரிவித்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என கூறி பிரதான சாலையான அந்தியூர் பிரிவு என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் பவானியின் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கறிஞர் பாலமுருகன், சிவராமன் என பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் மாநில எடப்பாடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.