பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது உள்ள ஒரு புகாரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத அந்த வழக்கில் மார்ட்டினுடைய 119 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
அந்த செய்தி குறித்து மார்டினுடைய நிறுவனமான ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் நாகப்பன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மார்ட்டின் ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக வாழ்ந்து வருவதாகவும், தனது தொழில்கள் மூலம் இந்திய அரசுக்கு மிகப்பெரும் தொகையை வரியாக செலுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார். கேரள வெள்ளத்தின் போதும், தமிழக கஜா புயலின் போதும் மார்ட்டின் அளித்த நிதியுதவியை குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, உண்மைக்கு மாறான செய்திகளால் தங்கள் நிறுவனத்தையும் தங்கள் நிறுவனங்களின் தலைவர் மார்ட்டினையும் களங்கப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.