Skip to main content

95 வயது தாயை நடுதெருவில் வீசிய மகன்கள்... கொசுக்கடியில் விடிய விடிய கிடந்த பட்டம்மாள்!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

தாயிற் சிறந்த கோயில் இல்லை என்ற முதுமொழி பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தாலும் பல பேருக்கு அந்த வார்த்தையின் உண்மையான மகத்துவம் போய் சேரவில்லையோ என்று நினைக்க தோன்றுகிறது இந்த சம்பவத்தை காணும்போது. அரியலூர் மாவட்டம் செயங்கொண்டத்தை அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். அவருடைய மனைவி பெயர் பட்டம்மாள். வயது 95. இவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

அவரின் கணவர் உடல்நிலைக் குறைவு காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே, தனிமரமான அவர் மகன்களின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார். கணவரின் பெயரில் இருந்த சொத்துக்களை பங்கீடும் வரையில் பட்டம்மாளை பார்த்துக்கொண்ட மகன்கள், இதற்குமேல் எந்த சொத்துக்களும் அவரிடம் இல்லை என்ற நிலையில், அவரை சிறிது சிறிதாக புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். அதுவும் கடந்த சில நாட்களாக எல்லை மீறிய நிலையில் இருந்து உள்ளது. நேற்று அவருடைய இரண்டாவது மகனான சதாசிவம் வீட்டில் தங்கியிருந்த இருந்த தனது அம்மாவை அழைத்து வந்து, தனது அண்ணன் சண்முகம் வீட்டில் விட்டுள்ளார். அம்மாவை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இங்கே ஏன் வந்தாய்? என்று பெற்ற தாயை ஒருமையில் பேசியதோடு அல்லாமல் அவமரியாதையாக நடத்தியுள்ளார்.

 

ghj

நான் வீட்டின் ஓரமாக இருந்து கொள்கிறேன் ராசா... என்று அந்த தாய் சண்முகத்தின் கையை பிடித்து கெஞ்சிய நிலையிலும் அவர் சிறிதும் மனது இறங்காமல் தாயை குண்டுகட்டாக தெருவில் வீசிவிட்டு சென்றுள்ளார். மகனோடு போராட உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், நடுத்தெருவில் படுத்து நேற்று இரவு பொழுதை கழித்துள்ளார் பட்டம்மாள். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்த நிலையில், அதிகாலையில் பட்டம்மாள் சாலையில் கிடப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் பட்டம்மாளை செயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு பட்டமாளை அவரது மகனிடம் சேர்க்கும் பொருட்டு ஆட்டோவில் செங்குந்தபுரம் அழைத்துவந்துள்ளார்.

ஆனால், பட்டமாளின் மகன்கள் இருவரும் அவரை வீட்டில் சேர்த்துகொள்ள மறுத்துவிட்டனர். பொதுமக்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் இருவரும் அதை காதில் வாங்க மறுத்துவிட்டார்கள். இதனால் செய்வதறியாது தவித்த பொதுமக்கள் பட்டமாளை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, சம்பவம் தொடர்பாக செயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக செயங்கொண்டம் காவல்துறையினர் பட்டமாளின் இரண்டு மகன்களிடமும் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்கள். அவர்களின் சமாதானத்தை ஏற்ற பட்டமாளின் மகன்கள் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்