கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார். இவர் வெல்டிங் ஒர்க்ஸ் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முல்லைக்கொடி. இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகி உள்ளது. இவர்களின் மகள் நந்தினி (14 வயது) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் முத்துகுமாருக்கும், முல்லைக்கொடிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முல்லைக்கொடி தனது மகள் நந்தினியுடன் காமராஜ் நகர் பகுதியில் கவுரி என்பவர் நடத்தி வரும் ஆதரவு இல்லத்தில் சேர்ந்தார். அங்கு இருபது நாட்களாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று (06/02/2020) பள்ளிக்கு செல்லாமல் ஆதரவு இல்லத்தில் இருந்த நந்தினி திடீரென உள்அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நந்தினி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.