Skip to main content

24 மணிநேரத்தில் குறைகளைத் தீர்த்து வைத்து நலம் விசாரித்த ஆட்சியர்

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

coimbatore district collector action taken within 24 hours 

 

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. கணவரை இழந்த ஷீலாவுக்கு 14 வயதில் ராமசாமி எனும் மாற்றுத்திறனாளி மகன் இருக்கிறார். தங்குவதற்கு சரியான இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஷீலாவுக்கு மணியம்மாள் என்ற மூதாட்டி தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இருப்பினும், மாற்றுத்திறனாளி மகனை விட்டு எங்கும் செல்ல முடியாத காரணத்தால் ஷீலாவால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் அன்றாடம் உணவுக்கே அல்லல்படும் சூழல் ஏற்பட்டது.

 

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையே அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு கொடுத்து உதவி வரும் மூதாட்டி மணியம்மாள் கடந்த திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு அவர்களை அழைத்துச் சென்று வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்த மனுவை உடனடியாக ஆய்வு செய்த ஆட்சியர், அடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வீடு வழங்க உத்தரவிட்டார். அதன்படி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி திட்டப்பகுதி குடியிருப்பில் வீடு ஒன்று ஷீலா குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கோவை ஆட்சியர் சமீரன் ஷீலா வீட்டிற்கு நேரில் சென்று வீடு ஒதுக்கீட்டிற்கான உத்தரவை வழங்கினார்.

 

மனு கொடுத்த 24 மணி நேரத்தில் வீடு வழங்க உத்தரவிட்டதுடன் நேரிலேயே சென்று உத்தரவு நகலை வழங்கிய ஆட்சியரைப் பார்த்ததும், தாய் ஷீலா கண்ணீர் விட்டு அழுது கொண்டே ஆட்சியரின் காலில் விழ முயன்றார். அதனை ஆட்சியர் தடுத்தார். இந்தச் சம்பவம் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்வதாய் இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது