ஈரோடு மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் நடந்த கலைத் திருவிழா, விளையாட்டு போட்டி, இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ மாணவிகள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இதன்படி ஈரோடு மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் நகுல், அ.பள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி தனுஜா இலக்கிய மன்றம் சார்பில் தேர்வாகி உள்ளனர். காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 மாணவர் ஸ்ரீசாந்த் விளையாட்டு பிரிவு சார்பிலும், பொன்னாத்தாவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி சிந்துஜா, ஊசிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் அய்யப்பன் ஆகியோர் கலை மற்றும் கலாச்சார பிரிவு சார்பிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பி.பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சையது இப்ராஹிம் வானவில் மன்றம் சார்பில் தேர்வாகியுள்ளார்.
இவர்கள் அனைவரும் தமிழக அரசு சார்பில் வெளிநாடு செல்ல உள்ளனர். இதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. இவர்களின் பெற்றோர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த விவரம், பாஸ்போர்ட் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த நாட்டுக்கு எத்தனை நாட்கள் செல்ல உள்ளனர் போன்ற விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதே சமயம் சுற்றுலாவுக்கு தேர்வான 6 பேரும் நாளைக்குள் தங்களது பாஸ்போர்ட்டை பள்ளிக்கல்வித்துறையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.