
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.499 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நாளை(6.4.2025) திறக்கப்படவுள்ளது. 700 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள், பழங்குடியினருக்கு தனி வார்டு எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.டி ஸ்கேன் வசதி, இருபாலருக்கான தனித் தனி காத்திருப்போர் அறை என்று பல்வேறு வசதிகள் உள்ளடக்கி இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக நாளை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில், அதிமுக ஆட்சியின் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலட்சிய எண்ணத்தை, 11 மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அதற்கு 447.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்வடிவம் கொடுத்தது எனது தலைமையிலான அதிமுக அரசு. ஆனால், அஇஅதிமுக ஆட்சியின் திட்டம் என்பதாலேயே, ஏறத்தாழ 4 ஆண்டுகள் வேண்டுமென்றே ஆமை வேகத்தில் செயல்பட்டு, இன்று ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அஇஅதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே; இருப்பினும், திமுக-வின் அரசியலுக்காக நீலகிரி மக்களை இத்தனை ஆண்டுகள் அலைக்கழித்திருக்க வேண்டாம். நாம் நடத்திய "தமிழ்நாடு மாடல்" ஆட்சியின் பெருமைமிகு சின்னங்களாக 11 மருத்துவக் கல்லூரிகளும் காலங்கள் கடந்து திகழட்டும். நம்மைப் போன்றே அயராது மக்கள் சேவை ஆற்றட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.