![coronavirus](http://image.nakkheeran.in/cdn/farfuture/KI7kwZ2nBXTU5Dh3raCF4xRPM3Ga6ygXX7FwjHhoPKg/1590592614/sites/default/files/inline-images/c_7.jpg)
கரோனோ நோய் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு மே 31-ஆம் தேதிவரை நீடிக்கிறது. கடந்த வாரத்திற்கு முன்புவரை கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து வந்தவர்களால் கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. கடந்த வாரம் அதே வேகத்தில் நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். அதையடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 432 ஆக இருந்தது.
இந்த நிலையில் நன்னடத்தை காரணமாக சென்னை புழல் சிறைக்கு கடந்த 13-ஆம் தேதி தன்னார்வலர்களாக பயிற்சிக்கு 5 ஆயுள் தண்டனை கைதிகள் அனுப்பப்பட்டனர். பயிற்சிகள் முடித்து 22-ஆம் தேதி கடலூர் சிறைக்கு வந்த அவர்களுக்கு கரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 45 வயதுடையவருக்கும், கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த 44 வயதுடையவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக சிறையில் உள்ள 680 கைதிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறையில் உள்ள காவலர்களுக்கும், கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த 2 சிறைக்கைதிகளுடன் நேற்று இருவருக்கும், இன்று 3 பேருக்கும் தொற்று உறுதியானதால் கடலூர் மாவட்டத்தில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 439 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 419 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 19 பேர், கடலூர் அரசு பொது மருத்துவமனையில் ஒருவர், புதுச்சேரி ஜிப்மரில் ஒருவர், சென்னை அப்பலோவில் ஒருவர், வீட்டு தனிமையில் ஒருவர் என 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தொடர்பில் தொடர்பில் இருந்தவர்கள் என 3,351 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 11,035 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 439 பேருக்கு கரோனா இருப்பதும், 10,437 பேருக்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 159 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.