
மத்திய அரசு வக்ஃபு சட்டத் திருத்த முன்வடிவினை (The Waqf (Amendment) Bill, 2024) மக்களவையில் அறிமுகம் செய்துள்ளது. இதனை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.03.2025) அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “வக்ஃபு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாக மத்திய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. இது சிறுபான்மை இசுலாமிய மக்களின் மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருக்கிறது.
இதனை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் 30.09.2024 அன்று தமிழ்நாடு அரசு தெளிவாகச் சொல்லி இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம் பெற்ற தி.மு.க. உறுப்பினர்களான முன்னாள் அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவும் கடுமையாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க. மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழு நிராகரித்து இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கிவிட்டது.
இந்த நிலையில் வக்ஃபு திருத்தச் சட்டமானது எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இசுலாமிய மக்களை வஞ்சிக்கும் இச்சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம் என்று நான் கருதுகிறேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, வக்ஃபு நோக்கத்துக்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்ஃபு திருத்தச் சட்டத்தில் இருக்கின்றன. எனவே இந்தத் திருத்தச் சட்டமானது வக்ஃபு அமைப்பையே காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கிவிடும். எனவே நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்” எனப் பேசினார்.