Skip to main content

கைத்தறி நெசவாளர்கள், சுங்குடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க டையிங் யூனிட் வேண்டும் - ஐ.பெரியசாமி சட்டமன்றத்தில் பேச்சு!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி கடந்த 5ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில் பேசும்போது, சின்னாளபட்டியில் வசிக்கும் கைத்தறி மற்றும் சுங்குடி மற்றும் சாயத் தொழிலாளர்கள் சாயப்பட்டறை அமைக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் முட்டுக்கட்டை போடுவதால் அவர்கள் மதுரைக்கு சென்று சாயத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சின்னாளபட்டியில் வசிக்கும் சாயத் தொழிலாளர்களுக்கு பெருந்தொகை செலவாகிறது. 

iperiyasami


இதோடு மதுரைக்கு தினசரி செல்ல வேண்டிய அவலநிலையில் உள்ளனர். அவர்களின் நலன் கருதி சின்னாளபட்டியில் டையிங் யூனிட் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு,  நிலத்தையும் தேர்வு செய்து அதற்கு ஒரு வேலை நிதி கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தர தயாராக இருப்பதாகவும் கூறினார். அதற்கு பதில் அளித்து பேசிய கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சின்னாளபட்டியில் உள்ள கைத்தறி நெசவாளார்கள் மற்றும் சுங்குடி தொழிலாளர்கள் நலன் கருதி ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் இ.பெரியசாமி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க டையிங் யூனிட் அமைப்பதற்கு போதிய நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், டையிங் யூனிட் அமைப்பதற்கு அங்குள்ள முதலீட்டாளர்கள் (சாயப்பட்டறை உரிமையாளர்கள்) தங்களுடைய முதலீட்டு பங்காக வங்கியில் கடன் பெற்றோ அல்லது மூலதனமாகேவா முதலீடு செய்தால் சட்டமன்ற உறுப்பினர் இ.பெரியசாமி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். 

இதுகுறித்து தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி கூறுகையில் தி.மு.க. ஆட்சியில் இருந்தால் நாங்கள் சட்டப் பேரவையில் கோரிக்கை வைத்து டையிங் யூனிட்டை அமைத்துக் கொடுக்க அவசியம் இருந்திருக்காது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தேன். இம்முறை கைத்தறி துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கி உள்ளார். சின்னாளபட்டியில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்கள் நலன் கருதி தொடர்ந்து சட்டப் பேரவையில் குரல் எழுப்புவேன் என்றார். டையிங் யூனிட் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் வழங்க தயாராக உள்ளேன் என்றார். சின்னாளபட்டி சாயத் தொழிலாளர்கள் நலன் கருதி சட்டப்பேரவையில் டையிங் யூனிட் அமைப்பதற்கு அயராது போராடி வரும் தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமிக்கு கைத்தறி நெசவாளர்கள், சாயத்தொழிலாளர்கள், சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்