தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆங்கிலத்தில் எழுதிய திராவிடன் மூவ்மெண்ட் அண்ட் பிளாக் மூவ்மெண்ட் (The Dravidian Movement and the Black Movement) என்ற நூலின் தமிழாக்கமான ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழா சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று (25.10.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நூலினை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திமுகஆட்சியைப் பொருத்தவரை, சாதியின் பேரால் சாத்திர சம்பிரதாயங்களின் பேரால் காலம் காலமாக உருவாக்கி வைத்திருந்த அத்தனை தடைகளையும் உடைக்கும் சட்டங்களை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக கொண்டு வந்திருக்கிறோம். தடை என்றால் அதை உடை அதுதான் நம்முடைய ஸ்டைல். அதனால்தான் நம்மை ஆதிக்க சக்திகளுக்கு பிடிக்கவில்லை.
அடக்கி ஓடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்களே என்ற ஆத்திரத்தை, ஆரிய ஆதிக்கவாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அதை இன்னும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு 'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது. இதை தெரிந்து தான், தந்தை பெரியார் சொல்லி கொடுத்தார், ‘திராவிடம் என்ற சொல்லுக்கு பயப்படுவது போன்று, ஆரியம் வேறு எந்தச் சொல்லுக்கும் அஞ்சி நடுங்கியதில்லை’ என்று பேசினார். அதை நாங்கள் இன்றைக்கு வரை, கண்கூடாக பார்க்கின்றோமே.
ஒருவர் இருக்கிறார், யார் என்று உங்களுக்கே தெரியும். சட்டமன்றத்தில் திராவிட மாடல் என்று எழுதி கொடுத்தால் பேச மாட்டார். இந்தி மாத விழா நடக்க கூடாது என்று சொன்ணல் அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவாங்க!. ஏன், ‘திராவிட நல் திருநாடு’ என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?. இப்படி பாடினால் சிலருக்கு, வாயும் வயிறும் மூலையும் நெஞ்சும் எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம். திராவிடம் என்பது ஒருகாலத்தில் இடப்பெயராக, இனப்பெயராக, மொழிப்பெயராக இருந்தது. ஆனால், இன்றைக்கு அது, அரசியல் பெயராக ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிப் பெயராக உருவெடுத்திருக்கிறது.
திராவிடம் என்பது ஆரியத்திற்கு 'எதிர்ப்பதம்' மட்டுமல்ல, ஆரியத்தை பதம் பார்க்கும் சொல். அவர்களுக்கு கலைஞரின் முழக்கத்தை நான் நினைவுபடுத்துகிறேன். 'கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் கடுகாட்டில் அவன் கட்டை வேகும். இந்த முழக்கத்தை நிலைநாட்ட தான், திராவிட மாடல் இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது மனு நீதியை மாற்றி, மக்களுக்கு சமநீதி சமூகநீதி சமவாய்ப்பை உறுதி செய்யும். இதைத்தான், இந்த புத்தகத்தின் 182ஆவது பக்கத்தில் அமைச்சர் பொன்முடி குறிப்பிடுகிறார்.
திராவிட இயக்கம் சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை கனவு கண்டது. அதனால் திராவிட இயக்கத்தின் பெரும்பாலான இலக்குகள், அரசியல் அல்லது பொருளாதார நோக்கை விடவும் சமூகநோக்கில் இருந்தன என்று மிரியாக சொல்லியிருக்கிறார். அதனால்தான் நம்முடைய முழக்கம் என்பது, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று எளிமையாக சொல்கிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதோடு, அனைத்து சமூகங்களின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்கிறேன்.
இதை எளிமையாகவோ சீக்கிரமாகவோ நிறைவேற்றி முடியாது. ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை ஒடுக்குமுறையை பழமைவாத மனோபாவத்தை 100 ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது. ஆனால், சுயமரியாதைச் சமதர்ம உலகத்தை அமைப்பதற்கான நம்முடைய பயணத்தில், நாம் முன்னேறிச் சென்று கொண்டிருகிறோம். மற்ற மாநிலங்களை விட தமிழநாடு இன்றைக்கு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம் தான் காரணம் என்பதை மட்டும். என்னால் உறுதியாக சொல்ல முடியும்” எனப் பேசினார்.