தமிழ்நாட்டில் சுமார் 50- க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் கடந்த சில வருடங்களில் சத்தமில்லாமல் மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் இல்லை என்று மூடப்பட்டு நூலகம் திறக்கப்பட்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குளத்தூர் கிராமத்திலும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சின்னப்பட்டமங்கலம் கிராமத்திலும் சக பத்திரிகை நண்பரான கே.சுரேஷ் உடன் இணைந்து நக்கீரன் எடுத்த முயற்சியால் கிராம மக்களுடன் பேசி அதிகாரிகளால் மூடப்பட்ட இரண்டு அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்த்து கல்வித்துறை அதிகாரிகளை வைத்து மீண்டும் திறக்கப்பட்டது.
அதே போல தான் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளுடன் இயங்கியதால், அடுத்த வருடமே சத்தமில்லாமல் மூடப்பட்டது. தகவலறிந்து பள்ளிக்கு சென்று மூடப்பட்ட பள்ளியிலிருந்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பேசியதுடன் செய்தியும் வெளியிட்ட நிலையில் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஒரு மாணவருடன் பள்ளி இயங்கியது.
இந்த நிலையில் தற்போது ஒரு மாணவர் கூட இல்லை என்று மீண்டும் பள்ளி மூடப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் நாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தியிடம் கோரிக்கை வைத்த நிலையில் மாணவர்களை சேர்க்க றெ்றோர்களிடம் நாம் நடத்திய பேச்சுவார்த்தையோடு, பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்களிடமும் பெற்றோர்களிடமும் தொடர்ந்து பள்ளியை திறக்க மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதன் பயனாக பல பெற்றோர்கள் முன்வந்து பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வந்தனர்.
மீண்டும் பள்ளி திறக்கப்பட உள்ளதால் ஒரே நாளில் கட்டிடங்கள், வகுப்பறைகள் வண்ணமயமாக்கப்பட்டது. திங்கள் கிழமை பள்ளிக்கு மாணவர்களை சேர்க்க வந்த பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இனிப்புகளும், பூவும் கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
மூடப்பட்ட பள்ளியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மீண்டும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரக்கல்வி அலுவலர் முத்துக்குமார் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மூடப்பட்ட மூன்றாவது அரசுப் பள்ளியையும் மீண்டும் திறந்தோம் என்ற மகிழ்ச்சியோடு நாம் அங்கிருந்து புறப்பட்டோம்.