சேலத்தில், நில அபகரிப்பு புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமார் (70). ரியல் எஸ்டேட் அதிபர். அதிமுகவில், சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக உள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் துர்கா சங்கர். இவர் சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கடந்த 1993ம் ஆண்டு, ஒரு ஏக்கர் நான்கு சென்ட் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கினார். இவர், சொந்த மாநிலத்தில் இருந்து வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து சேலத்தில் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துர்கா சங்கர், ஏற்காட்டில் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுக் கொடுக்கும்படி சுகுமாரிடம் கேட்டுள்ளார். அவரும் விற்றுக் கொடுப்பதாக கூறியதை அடுத்து, நிலத்தின் ஆவண நகல்களை வழங்கியுள்ளார். ஆனால் சுகுமாரோ, போலி ஆவணங்கள் தயார் செய்து, துர்கா சங்கர் நிலத்தை தனது பெயருக்கு கடந்த 2014ம் ஆண்டு மாற்றிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய நிலத்தை கொடுத்து விடுமாறு துர்கா சங்கர், அடிக்கடி சுகுமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு சுகுமார் மறுத்துள்ளார். இதையடுத்து துர்கா சங்கர், சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் சுகுமார் மீது நில அபகரிப்பு புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தீவிர விசாரணையில் இறங்கினர். போலி ஆவணங்கள் மூலம் துர்கா சங்கருக்குச் சொந்தமான நிலத்தை சுகுமார் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதும், அந்த நிலத்தை அவர் 8 பேருக்கு அடுத்தடுத்து கைமாற்றி இருப்பதும் தெரிய வந்தது. அந்த நிலத்தின் சந்தை மதிப்பு 10 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சுகுமாரை மார்ச் 21ம் தேதி, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் நிலம் வாங்கிய 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில் சுகுமார், ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைதான சுகுமார், முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர். அந்த நெருக்கம் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அவரை களம் இறக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், தாசநாயக்கப்பட்டியில் இருந்து சேலம் மாநகர எல்லைக்குள் வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் மாற்றம் செய்யப்படாததால் கடைசி நேரத்தில் அவருடைய வேட்புமனு பெறப்படாமலேயே நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் 52வது வார்டில் சுகுமார் தனது மகள் ரம்யாவை கவுன்சில் வேட்பாளராக களமிறக்கினார்.
இதையடுத்து ரம்யாவை மேயர் வேட்பாளராக அறிவிக்கவும் அதிமுக மேலிடம் முடிவு செய்திருந்தது. மகளை வெற்றி பெறச்செய்வதற்காக சுகுமார், கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரிடம் கணிசமான தொகையை கொடுத்ததாகவும், ஆனால் அவரோ பணத்தை செலவழிக்காமல் லபக்கி விட்டதாகவும், அதனால்தான் தேர்தலில் தனது மகள் தோற்றுப்போனார் என்றும் சுகுமார், எடப்பாடி பழனிசாமியிடம் புகார் அளித்தார்.
இதனால் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. அவரை ஏமாற்றியதாக சொல்லப்படும் பிரமுகரின் தூண்டுதலின் பேரில்தான் சுகுமார் மீது நில அபகரிப்பு வழக்கு பாய்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எடப்பாடிக்கு நெருக்கமானவராக கருதப்பட்டு வந்த சுகுமார், கைது செய்யப்பட்ட சம்பவம், சேலம் மாநகர அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.