குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான திமுக கூட்டணிக் கட்சிகளின் பேரணி அமைதியான முறையில் முடிந்தது.
எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ எம்.பி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் எம்.பி, காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, பா.சிதம்பரம், வேல்முருகன், ஈஸ்வரன், கனிமொழி எம்.பி, தயாநிதிமாறன் எம்.பி, உதயநிதி ஸ்டாலின், சுப, வீரபாண்டியன், தமிமுன் அன்சாரி ஐஜேகேவின் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி முழக்கத்தை எழுப்பினர். இந்த பேரணியில் சுமார் 50,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் "குடியுரிமை சட்டத்திருத்ததைத் திரும்பப் பெறக்கோரி முழக்கமிட்டனர். மேலும் மதரீதியாக மக்கள் பிரிக்க வேண்டாம் என்றும், அகதிகள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே மேடையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்தது பேரணி இல்லை, போர் அணி. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் தொடரும். திமுக பேரணி விளம்பரமடைய துணை நின்ற அதிமுக, பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி". இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
பேரணி பாதுகாப்பு பணியில் 2 கூடுதல் ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 4 ட்ரோன்கள், 110 கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.