
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக மண்ணச்சநல்லூர் மற்றும் ச.கண்ணனூர் பேரூராட்சிகளில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகளை கடந்த (22.01.2022) அன்று மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் ரூ.30.11 கோடி மதிப்பீட்டிலும், மற்றும் எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் ரூ.19.45 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.49 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் மண்ணச்சநல்லூர் மற்றும் ச.கண்ணனூர் பேரூராட்சிகளில் 1,758 ஆழ்துளைத் தொட்டிகள், 49.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாளக் குழாய்கள், 2 பிரதானக் கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் 6,019 வீட்டு இணைப்புகளின் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீரானது, மண்ணச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள 6.41 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பசுமைக் காடுகள் வளர்ப்புக்கு பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 50 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.