
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் திருச்சியில் இன்று நடைபெறும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பாசறைக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 மண்டலங்களிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பாசறைக்கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் மேடை அமைத்து, இன்று பயிற்சி துவங்கி உள்ளது. இந்தப் பயிற்சியில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு, திருச்சி தெற்கு, மத்திய, வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இந்த மாவட்டத்துக்குட்பட்ட வாக்குச்சாவடி திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கார்கில் போர் நினைவு தினம் என்பதால், திருச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மேஜர் சரவணன் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தனியார் நட்சத்திர ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார். பாசறைக் கூட்டத்திற்குத் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இருந்து காலை முதலே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் வர ஆரம்பித்தனர். ஒவ்வொருவருக்கும் முதல்வரின் படம் பொறித்த டீசர்ட், கையில் மஞ்சப்பையில் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அடங்கிய புத்தகம், மேலும் க்யுஆர் கோடுடன் கூடிய விண்ணப்பப் படிவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது..
விழாப் பந்தலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு மஞ்சப்பையில் வாட்டர் பாட்டில், ஒரு பிஸ்கட் பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது. மேலும் காலையில் வருபவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டது. மதிய உணவிற்கான ஏற்பாடுகள் விழா மைதானத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முகாமின் முதல் நிகழ்ச்சியாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், கழக வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ பேசினார்.
திராவிட மாடல் கழக அரசின் மக்கள் நலன் காக்கும் சமூக நலத்திட்டங்கள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசவுள்ளார். ஆப் (செயலி) மற்றும் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா பேசவுள்ளார். திராவிட மாடல் கழக அரசின் மக்கள் நலன் காக்கும் சமூக நலத்திட்டங்கள் குறித்துத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசவுள்ளார்.
மதியம் 2 மணி நேரம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 3 மணிக்கு சமூக வலைத்தளங்கள் பயன்பாடும் செயல்படுத்த வேண்டிய முறைகளும் குறித்து கழக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி பேசவுள்ளார். திராவிட மாடல் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விழாவிற்குச் சரியாக 4 மணிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் 4.45 மணிக்குச் சிறப்புரையாற்றுகிறார். இரவு மீண்டும் சுற்றுலா மாளிகையில் தங்கி மீண்டும் மறுநாள் காலை 27 ஆம் தேதி ராம்ஜி நகர் அருகே உள்ள கேர் கல்லூரியில் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சியிணைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றுகிறார். பின்பு சாலை மார்க்கமாகத் தஞ்சாவூர் செல்லும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மீண்டும் இரவு 9.40 மணிக்குத் திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.