




சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கான கட்டுமான பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19/10/2021) நேரில் ஆய்வு செய்தார். மேலும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளில், முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளையும் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதனிடையே, கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையக் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடச் செல்லும் வழியில், துரைப்பாக்கம் சிக்னல் அருகில் தாயுடன் இருந்த சிறுமியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.