தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் ஆதி திராவிடர் நலத்துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மாநில அளவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும். மாநில அளவில் ஆதி திராவிடர் நல ஆணையம் உருவாக்க தனி சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க நான்கு கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சாதி வேறுபாடற்ற மயானங்கள் திட்டத்திற்கு ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.
இதனிடையே, சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.