Skip to main content

சிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் 10 நாட்களாகப் பூட்டப்பட்டதால் பரபரப்பு!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

Chidambaram

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவபுரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 836 வீடுகளும் 2,600 பொதுமக்களும் வசிக்கின்றனர். ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அன்புச்செல்வன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர். துணைத் தலைவராக மாற்று சமூகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி உள்ளிட்ட  பத்து உறுப்பினர்கள் உள்ளனர்.

 

இந்நிலையில், ஊராட்சி மன்றச் செயலாளராகப் பதவி வகித்து வந்த கண்ணன் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பணி விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். இதனால், தற்காலிகமாக அருகே உள்ள பெராம்பட்டு கிராம ஊராட்சி செயலாளர் வடிவேல் என்பவரை நியமித்து, அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். வடிவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி தலைவர் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அந்த ஊராட்சிக்கு வடிவேலை மீண்டும் நியமித்து உள்ளனர்.

 

இதனால் மன உளைச்சல் அடைந்த தலைவர் அன்புசெல்வன் ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டுப் போட்டு பூட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் பாதித்தது. இதனை அறிந்த குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ராஜ் மற்றும் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து ஊர்ப் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு நிலவியது.

 

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் அன்புசெல்வன் கூறுகையில், "இந்த ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றுபவர் கண்ணன், அவர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒப்பந்தப் பணிகளைச் செய்து வருகிறார். இவரால் ஊராட்சியில் உள்ள வேலைகளைப் பார்க்க நேரமில்லை என்று அவரது மனைவின் அக்கா தேவியை கடந்த 3 வருடமாகச் செயலாளர் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து தேர்தல் மூலம் தேர்வு பெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேவி பணியாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரை பணி செய்ய அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் அருளானந்தம் எண்ணிடம் மிரட்டும் தோனியில் ஏன் தேவியை வைத்துப் பணி செய்தால் என்ன எனப் பேசினார். இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பால் நான் அனுமதிக்கவில்லை. இதுதான் எதிர்ப்புக்கு காரணம். மேலும் ஊராட்சியில் எந்தக் கணக்கும் பராமரிக்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் உங்கள் வேலையைப் பாருங்கள் இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

 

மீன்குளம் குத்தகை எடுப்பதில் அவர்கள் சொல்லும் நபருக்குக் கொடுக்கவேண்டும் என்பதால், அவர்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட மிரட்டி நிர்பந்தம் செய்கிறார்கள். நான் பட்டியல் சமூகம் என்பதால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார்கள். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியருக்குப் புகார் கொடுத்துள்ளேன். தற்போது கண்ணன் விடுப்புக்குச் சென்றதால் பல்வேறு குற்றசாட்டுக்கு உள்ளான வடிவேலை செயலாளராக நியமித்துள்ளனர். இதற்கு வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் நான்அலுவலகத்தைப் பூட்டினேன். அதன் மேல் கண்ணன் தரப்பினரும் ஒரு பூட்டுபோட்டனர்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்