சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 19-ஆம் தேதி தேர் திருவிழாவும், 20-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுமென நடராஜர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கரோனா, ஒமிக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் விதமாக சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை ஒருங்கிணைப்பு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இதில் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ், சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் சார்பில் தீட்சிதர்கள் சிவ செல்வம், கார்த்திகேயன், கணேஷ் ஆகிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர். இதில் தொற்று காரணமாக தேர் மற்றும் தரிசன விழாவிற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை இல்லை என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும் தீட்சிதர் மற்றும் தீட்சிதர் குடும்பங்கள், பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் 2 தவணை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோவிலில் அனுமதிக்கப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து 19-ஆம் தேதி தேர் திருவிழாவின் போது காலை 9 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் பக்தர்கள் கீழ சன்னதி வழியாகச் சென்று வடக்கு சன்னதி வழியாக வெளியே வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 20-ஆம் தரிசனத்தின் போது சாமி சித்சபைக்கு சென்றபிறகு மாலை 4 மணிக்கு மேல் வழிபடலாம் என வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என வருவாய் துறை சார்பில் கேட்டுக் கொண்டனர். மேலும் இது குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிதம்பரம் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.